இயற்கை வேளாண்மைக்கு ஏற்ற பயிர்கள்
பசுமைப் புரட்சி
வேளாண்மையே நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள், ரசாயன உரங்கள் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இயற்கை வளம், மண் வளம் பாதிப்புக்கு உள்ளானது.
இயற்கை வேளாண்மை
- மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
- இயற்கை வளங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு, உரிமை உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பது குறித்து பல்வேறு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைந்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தலாம்.
- இயற்கை வேளாண் உற்பத்தியில் தரமான விதை, ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையைக் கடைப்பிடிப்பதால் போதுமான உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
- இயற்கை உரங்களான பசுந்தாள் உரங்கள், கால்நடை எருக்கள், மண்புழு உரம் போன்றவை பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைகிறது. இதன் மூலம் இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது.
- இயற்கை வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாடு மிகவும் குறைவு. அதனால் இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள் தரமானதாக இருக்கும்.
- கால்நடை உரங்கள், மரத்தடியிலிருக்கும் உதிர்ந்த இலைகள், மக்கிய குப்பை ஆகியவற்றை சேகரித்து, சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான இயற்கை உரங்கள் வழங்க முடியும்.
பொருத்தமான பயிர்கள்
- பருப்பு வகைகள், நெல், கோதுமை, மக்காச்சோளம், வாழை , கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வெள்ளரி , சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, போன்ற பயிர்கள் இயற்கை வேளாண்மைக்கு மிகவும் பொருத்தமானவை.
- இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் அதிக சத்துள்ளதாகவும், தரமுள்ளதாகவும் இருக்கின்றன. இவ்விளைப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் பொருட்டும், அதன் தரத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் இவ்விளைபொருள்கள் பசுமை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.
பசுமை அங்காடிகள்
- மக்களிடம் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ரசாயன உரங்களின் பயன்பாடு பற்றிய எண்ணங்களை மாற்றுவது, நகரங்களில் வசிப்போருக்கு இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் பொருள்கள் கிடைக்கச் செய்வதே பசுமை அங்காடிகளின் முக்கிய நோக்கம்.
- பசுமை அங்காடிகள் தமிழகம், கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சிறப்பாக செயலாற்றி, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
அங்காடியின் நன்மைகள்
பசுமை அங்காடியில் விவசாயிகள் நேரடியாக தங்களது இயற்கை வேளாண் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யலாம். இங்கு இடைத்தரகர்கள் இல்லாததால் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. நுகர்வோர் பலர் நகரங்களில் வசிப்போர், தங்களது தேவைகளை நேரடியாக விவசாயிகளிடம் கூறுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.