தரிசு, களர், உவர் நிலங்களுக்கு மானிய உதவி
ஒரு சில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன.
அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
- களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் செய்ய நிலம் 25 முதல் 30 சென்ட் பரப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
- பெரிய நிலமாக இருந்தால் நடுவில் வாய்க்கால் அமைக்கலாம். நிலத்தின் சரிவுக்கு ஏற்ப வடிகால்கள் அமைக்க வேண்டும்.
- வயலின் பரப்பிற்கேற்ப ஜிப்சத்தை கணக்கிட்டு பரவலாக இட்ட பிறகு சுமார் 10 செ.மீ. நீர் தேக்கி நன்கு உழவு செய்ய வேண்டும்.
- நிலத்தில் தேக்கிய நீர் தானாகவே மண்ணில் ஊறி வடிகாலில் சேரும்படி செய்ய வேண்டும். இதற்கு ஓரிரு நாள்களாகலாம். மீண்டும் குறைந்தபட்சம் இதை 4 முறையாவது செய்ய வேண்டும்.
- பிறகு மண்ணில் ஈரம் காய்வதற்கு முன் சணப்பு அல்லது தக்கை பூண்டை விதைத்து பூக்கும் சமயத்தில் மடக்கி உழ வேண்டும். பின்னர் வழக்கம்போல் விவசாயிகள் விரும்பும் பயிரை சாகுபடி செய்யலாம்.
மானியம்
- தமிழக அரசு களர், உவர் நிலச் சீர்திருத்த திட்டத்தின் மூலம் களர், உவர் நிலங்களால் பாதிக்கப்பட்ட வயல்களில் மண் மாதிரி எடுத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஜிப்சம் மற்றும் ஜிங் சல்பேட் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்குகிறது.
- மேலும் வடிகால் அமைக்க ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ. 1000 மானியம் வழங்கப்படுகிறது.